ஒரு சமயம் கயிலாயத்தில் சிவபெருமான் உமாதேவிக்கு பஞ்சாட்சரத்தின் பெருமைகளை விளக்கிக் கொண்டிருந்தபோது அருகில் ஒரு இருந்த மயில் ஒன்றின் ஆட்டத்தில் உமையவள் மனம் லயித்து விட்டாள். இதனால் கோபமடைந்த சிவபெருமான், உமாதேவியை மயிலாகப் போகும்படி சபித்தார். திடுக்கிட்ட உமையம்மை சிவபெருமானிடம் சாபவிமோசனம் வேண்ட, 'பூவுலகிற்குச் சென்று புன்னை வனத்தில் மயிலுருவில் இருந்து எம்மை வழிபட்டு வா. தக்க சமயத்தில் உன்னை ஆட்கொள்வோம்' என்று அருளினார்.
உமாதேவியும் பூமிக்கு வந்து புன்னை மரத்தடியில் லிங்கத்தை அமைத்து பூஜை செய்து சிவபெருமானால் மீண்டும் ஆட்கொள்ளப் பெற்றார். அம்பிகை மயிலாக வந்து பூஜை செய்தமையால் இப்பகுதி மயிலாப்பூர் என்று வழங்கப்பட்டது. மயில்கள் இப்பகுதியில் அதிகம் இருந்ததால் அவை ஆர்ப்பரிக்கும் ஓசையும் மிகுந்து காணப்பட்டது. அதனால் இப்பகுதி 'மயிலார்ப்பு' என்று வழங்கப்பட்டதாகவும், காலப்போக்கில் மருவி 'மயிலாப்பூர்' என்று அழைக்கப்பட்டதாகவும் கூறுவர்.
பிரளயக் காலத்தில் சிவபெருமான் தம்மிடம் ஒடுங்கிய உயிர்களை தம் கையில் உள்ள பிரம்ம கபாலத்தின் உதவியால் மீண்டும் படைக்கிறார். உயிர்களை உய்விக்க கபாலத்தைத் தம் கையில் ஏந்தியதால் இத்தலத்து இறைவன் 'கபாலீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
மூலவர் 'கபாலீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், பெரிய லிங்க வடிவில் மேற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'கற்பகாம்பாள்', 'கற்பகவல்லியம்மை' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள். இக்கோயிலில் அம்பாளை வணங்கிய பிறகு தான் மூலவரை தரிசிக்கச் செல்கின்றனர்.
கோஷ்டத்தில் செல்வ விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். உள்பிரகாரத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமண்யர், நடராஜர், ஆறுமுக சுவாமி, பிட்சாடனர், அறுபத்து மூவர் ஆகியோரின் உற்சவ மூர்த்திகள் மற்றும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, நாகதேவதை, பைரவர், வீரபத்திரர், சமயக் குரவர்கள், அறுபத்து மூவர், சந்தானக் குரவர்கள் மற்றும் சேக்கிழார் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
வெளிப்பிரகாரத்தில் நர்த்தன கணபதி, அண்ணாமலையார், ஜகதீஸ்வரர், வள்ளி, தேவசேனா சமேத சிங்காரவேலர், புன்னை வன நாதர், பழனி ஆண்டவர், வாயிலார் நாயனார், அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர்-பூம்பாவை, சனீஸ்வரன், நவக்கிரகங்கள், சுந்தரேஸ்வரர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
இத்தலத்தில் வசித்து வந்த சிவநேச செட்டியாரின் மகளான பூம்பாவை இறை வழிபாட்டிற்காக மலர் பறித்துக் கொண்டிருந்தபோது அரவம் தீண்டி இறந்துவிட்டாள். மகளை தகனம் செய்து சாம்பலையும், எலும்பையும் ஒரு மண் குடத்திலிட்டு வைத்திருந்தார். சம்பந்தர் திருமயிலைக்கு எழுந்தருளியபோது செட்டியார் அவரைச் சந்தித்து நடந்தவற்றைக் கூறினார். அவரும் 'மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலை' என்று தொடங்கும் பதிகத்தைப் பாட, கபாலீஸ்வரர் அருளால் பூம்பாவை மீண்டும் உயிர்பெற்றாள். இன்றளவும் பங்குனி பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாள் திருவிழாவில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அன்று மாலை நடைபெறும் அறுபத்தி மூவர் திருவிழா பிரசித்திப் பெற்றது.
63 நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார் இத்தலத்தில் அவதரித்து மனத்தினாலே சிவபூஜைகள் செய்து முக்தி பெற்றார்.
இத்தலத்தில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் திருக்குளத்தில் இருந்த அல்லி மலரின் மீது தான் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான பேயாழ்வார் அவதாரம் செய்தார்.
இராமபிரான், பிரம்மா, சுக்கிராச்சாரியார், நான்கு வேதங்கள், ஐயடிகள் காடவர்கோன், பாம்பன் சுவாமிகள் ஆகியோர் வழிபட்ட தலம்.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|